கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் சரண்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட ஜெகன் என்ற 28 வயது இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
ஜெகன் மற்றும் சரண்யா ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்றபோதிலும் காதலை எதிர்த்து பெண் வீட்டாரால் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெகனைக் கொலை செய்த சரண்யாவின் தந்தை சங்கர் சரணடைந்தார். இந்நிலையில், ஜெகனைக் கொலை செய்தவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது. நாகரீகம் என்ற குடிமைச்சமூகமாக வாழ்ந்துவரும் தற்காலத்திலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பென்ற பெயரில் அரங்கேறும் ஆணவப்படுகொலைகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது.
மனித மனங்கள் ஒன்றுபட்டு மனமொத்து செய்கிற திருமணத்திற்கு சாதி, மதம், வர்க்கம் என எந்தவொரு காரணியைக் காட்டியும் எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஜெகனைக் கொன்றவர்களைக் கைதுசெய்து அவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமியற்றவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


























