இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் திருட்டுப்போன வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றிய பணியாட்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள செயிண்ட் மேரீஸ் சாலையில் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டு லாக்கரிலிருந்த 60 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் காணவில்லை என்று தேனாம்பேட்டையிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை, 3 முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்றும், தற்சமயம் உள்ள செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, சிஐடி நகர் வீடு, போயஸ் தோட்ட வீடு என்று லாக்கர் மாறியதும், இதுபற்றி தனது வீட்டில் பணிபுரியும் பணியாட்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இதுபற்றி பணியாள் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில் அவரும் கார் டிரைவர் வெங்கடேசனும் சேர்ந்து 2019லிருந்து லாக்கரிலிருந்து சிறுகச் சிறுக சுமார் 3 கோடியே 6 லட்சம் வரையிலான நகைகளைத் திருடியதும், ஈஸ்வரி கணவர் உதவியுடன் அதைப் பணமாக மாற்றியதும், அப்பணத்தை வைத்து ஒஎம்ஆர்-ல் ரூ.95 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியதும் அம்பலமாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் நகைகளை விற்றவரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைரம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் நிலம் வாங்கிய வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை மீட்டுள்ளன. மேலும் இக்குற்றச்செயலில் ஈடுபட்ட பணியாள் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஈஸ்வரி 18 வருடங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றிவரும் நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் வேலையிலிருந்து நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.


























