கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்டு 16 – 1947’ பட டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், பலதரப்பு ரசிகர்களிடையே டிரெய்லர் கவனம் பெற்றுவருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், ரேவதி ஷர்மா, ’குக் வித் கோமாளி’ புகழ், ரிச்சர்டு ஆஷ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’ஆகஸ்டு 16 – 1947’. NS பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்து, பெரும் போராட்டங்களுக்கும் துயரங்களுக்கும் பிறகு சுதந்திரம் பெற்ற வரலாற்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், பலதரப்பு மக்களிடையே டிரெய்லர் வரவேற்பைப்பெற்றுவருகிறது.
இந்தியர்கள் எப்படியெல்லாம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தனர், பெண்களுக்கு எதிராக அச்சமயம் அவர்களால் அரங்கேற்றப்பட்ட கொடுமைகள், சுதந்திரம் பெற எத்தகைய சிரமங்களையெல்லாம் மக்கள் எதிர்கொண்டனர் போன்ற காட்சியமைப்புகளைக் கொண்டு, உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு ஆகஸ்டு 15ல் சுதந்திரம் கிடைத்தது தெரியாத தென்காசி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், அன்றைய தினத்திற்கு முன் மற்றும் அடுத்த நாள் நடைபெறும் கற்பனை கலந்த சம்பவங்களே இதன் மைக்கரு என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’கடல்’ படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னத்தால் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட கௌதம் கார்த்திக் சரியான கதைக்களங்கள் கிடைக்காமல் கிடைத்த படங்களில் நடித்து தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், சிம்புவுடன் இவர் நடித்துள்ள ’பத்து தல’ மற்றும், ’ஆகஸ்டு 16 – 1947’ படங்கள் மூலம் தனது சினிமா பயணத்தில் வெற்றியைப் பதிப்பார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ’பத்துதல’ படம் மார்ச் 30ம் தேதியும், ’ஆகஸ்டு 16 – 1947’ படம் ஏப்ரல் 7ம் தேதியும் திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியாகின்றன.


























