2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்விக்கடன் ரத்து, எரிவாயு மானியம் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு அறிக்கையை வாசிக்கத் துவங்கிய நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மகளிர் உரிமைத்தொகை, மெட்ரோ பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, கலைஞர் நினைவு நூலகம் திறப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் உப்பு சப்பு இல்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பில் திமுக வாக்குறுதி தந்ததற்கு மாறாக நடந்துகொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் திட்டங்கள் இருக்காதா என்று எதிர்பார்த்த மக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை மூலம் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மின்கட்டண உயர்வால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மக்கள், திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான ’மாதம் ஒருமுறை மின்கட்டணம்’ குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகாதது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாதது அவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவேண்டும். ஆனால், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்று அறிவித்து பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
ஆக, பொதுமக்கள் பெரிதும் நம்பியிருந்த கல்விக்கடன் ரத்து, நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம், மாதம் ஒரு முறை மின் கட்டணம், எரிவாயு மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற எவையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்நிதிநிலை அறிக்கை நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


























