’SURIYA42’ படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு பற்றிய அப்டேட்களை அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சூர்யா நடித்துவரும் ‘SURIYA42’. சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சரித்திரப் படமாக ‘SURIYA42’ உருவாவதால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. அண்மையில் இதன் அறிவிப்பில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நிற்பது போன்ற காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆவலடையச் செய்தது. இதைத்தொடர்ந்து படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் சிலவற்றை இதன் தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல் ராஜா தற்சமயம் சத்தமே இல்லாமல் வெளியிட்டுள்ளது இணையத்தில் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது. அண்மையில் தான் தயாரித்துள்ள ’பத்து தல’ படம் தொடர்பான பேட்டியில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார்.
அதன்படி, ‘SURIYA42’ படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என்றும், அதன் டீசர் மே மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் இருப்புக்கொள்ளாமல் ஆரவாரத்தில் உள்ளனர். இதனால் இந்த அப்டேட்டுகளை எதிர்நோக்கி மரண வெயிட்டிங்கில் அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


























