மூச்சுத்திணறல் காரணமாக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திமுக கூட்டணியில் நின்ற இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றார்.
இதைத்தொடர்ந்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திக்கும் பொருட்டு பயணம் மேற்கொண்டு திரும்பிய அவருக்கு திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வந்த அவருக்கு சிறுநீரகத் தொற்று உள்ளதாகவும், அதனாலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பிவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உடல்நலம் தேறிவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























