குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையான ரூ.1000-ஐ, ரூ.29,000-ஆக சேர்த்து வழங்கவேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, வரும் செப்டம்பர் 15-லிருந்து துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இதுவரையிலான தவணைகளைச் சேர்த்து மொத்தம் ரூ.29,000-ஆக குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாந்திர உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டு, தற்சமயம் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து திமுக அந்தர்பல்டி அடித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


























