தமிழ்நாட்டின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் இதை வாசிக்கத் துவங்கியதைத் தொடர்ந்து பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1000 உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
- தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைந்துள்ளது.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு; பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு; ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு; உயர்கல்வித்துறைக்கு ரூ.1,967 கோடி ஒதுக்கீடு.
- மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
- அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழிபெயர்த்திட ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
- மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு.
- மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும்; இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. இதனால் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு.
- தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்; சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
- 5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.
- அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
- சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு; சென்னை கோடம்பாக்கம் – பூந்தமல்லி வரையிலான மெட்ரோ திட்டம் 2025 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.
- கோவையில் கோவை அவினாசி – சத்தியமங்கலம் இடையே மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்; மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- 1000 புதிய பேருந்துகள் வாங்க, 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க, ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.
- பத்திரப்பதிவுக் கட்டணம் 4%லிருந்து 2%ஆகக் குறைவு.
- தமிழ்நாட்டின் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்


























