மாணவர்கள் தேர்வெழுத 75% வருகைப்பதிவேடு கட்டாயம் இல்லை என்று அண்மையில் வெளியான செய்தி குறித்த வதந்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அண்மையில் துவங்கியது. இதில் சுமார் 50,000 மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பாடமான மொழித் தேர்வு எழுதாமல் ஆப்செண்ட் ஆனது பேசுபொருளானது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு சில நாட்கள் மட்டுமே வந்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் பள்ளிகளுக்கு ஆண்டிற்கு 3 நாட்கள் வந்தாலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று வருகைப் பதிவேடுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்தும் தகவல் வெளியானது. மாணவர்களை தேர்வெழுத வைக்க இந்த முயற்சி என்று பல்ளிக்கல்வித்துறையால் விளக்கமளிக்கப்பட்டது.
இது சமூக செயற்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு விதிமுறைகள் மாற்றப்பட்டது மாணவர்களிடையே பள்ளிக்கு வரும் ஆர்வத்தை குறைக்கும் என்றும், தேர்வு எழுவது மட்டுமே கல்வி அல்ல என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கு மட்டுமே இந்த விதிமுறை என்றும், இது தொடராது என்றும் இதுகுறித்த விளக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ”இப்போது 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் அனைவரும் கொரோனா பரவலால் 10ம் வகுப்பில் ஆல்பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள். இந்த இரு ஆண்டுகளில் மாணவர்களின் பெற்றோர் பொருளாதார வாழ்வாதார ரீதியில் பாதிக்கபட்டிருக்கலாம். அல்லது மாணவர்களே மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது என்பதற்காக, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. அப்படி விதிமுறைகள் மாற்றப்பட்டால், மாணவர்கள் பள்ளிகளுக்கு வர மாட்டார்கள். இனி 75% வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் வரும் கல்வியாண்டில் எந்த மாற்றமும் இருக்காது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும். கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் துணைத்தேர்வில் அவர்களோடு சேர்த்து தோல்வியடைந்த மாணவர்களையும் சேர்த்து 51 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
வழக்கமாக தேர்வு முடிவடைந்த பின்னரே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். ஆனால் மொழிப்பாடத்திற்கே 50 ஆயிரம் மாணவர்கள் வராததால், உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, பெற்றோரிடம் தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளோம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு பெற்றோரும் உதவியாக இருக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.


























