கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதன் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துவருகின்றன.
இந்நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், 140 தொகுதிகளிலும் வெற்றிபெற்று கர்நாடகாவில் தனித்த ஆட்சியை அமைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடகத் தேர்தலில் ஏற்கனவே இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


























