பொதுச்செயலாளர் தேர்தல் என்பது சர்வாதிகாரம் என்றும், எடப்பாடி பழனிசாமி அப்பதவியை பிக்பாக்கெட் அடிக்கப் பார்ப்பதாகவும் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். இதுகுறித்து பேசிய அவர், ”அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் என்பது ஒரு சர்வாதிகாரம். எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக்பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் பதவியை இவர்கள் அடித்துசெல்லப் பார்க்கிறார்கள். இப்பொழுதெல்லாம் தண்ணீர் பாட்டிலைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜியாக உள்ளது. பொதுக்குழுக் கூட்டத்தில் தண்ணீர் பாட்டில் எங்கிருந்து எங்களை நோக்கி வந்தது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அப்படியொரு அராஜகமான முறையில் ரவுடிகளை வைத்து பொதுக்குழுவை அவர்கள் நடத்தினர். இந்தியத் தேர்தல் ஆணையம் அந்தப் பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை.
அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அணி மீது அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழகத்தை தோல்வி பெறச்செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். அதிமுக இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு” இவ்வாறு பேசினார்.


























