தருமபுரியில் அண்மையில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், மீண்டும் 1 யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள கெலவள்ளி பகுதியில் உணவுக்காக வயலுக்குள் புகுந்த ஆண் யானை ஒன்று உயர் அழுத்த மின்கம்பியின் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கம்பீரமாக நடந்துசென்ற யானை எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து நிலைகுலைந்து சரியும் காட்கள் அடங்கிய காணொலி இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்கச்செய்தது.
கடந்த 8ம் தேதி இதே மாவட்டத்தின் மாரண்டஹள்ளி பகுதியில் உணவுக்காக வயலுக்குள் புகுந்த 5 யானைகளில் 1 ஆண் யானை மற்றும் 2 பெண் யானை உள்ளிட்ட 3 யானைகள் கீரிப்பிள்ளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கூண்டில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
இதில் உயிர் பிழைத்த 2 குட்டி யானைகள் வனத்துறையினரால் முதுமலை காட்டில் விடப்பட்டன. இந்நிலையில், உணவு தேடி அலையும் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாகிவருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


























