2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியுள்ளது அக்கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறவேண்டும் என்று பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதற்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கூட்டணி குறித்த விஷயங்களைப் பேச இது சரியான இடம் இல்லை என்று அவர் தெரிவித்த நிலையில், கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்கவேண்டி தனது தலைவர் பதவியைக் கூட ராஜினாமா செய்ய தயார் என்றும், கட்சியைப் பொறுத்தமட்டில் சாதாரண தொண்டனாக இருந்துகூட உழைக்கத் தயாராக இருப்பதாகவும், திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழக பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அண்ணாமலையின் பேச்சு தமிழக அரசியலில் கனலைக் கிளப்பியுள்ளது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி உடையலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


























