தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று திடீர் மழை பெய்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைவெயில் வாட்டிவதைக்கத் துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதத்தின் இடையிலேயே துவங்கி தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக காலை முதலே தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கிவருகிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் மழை கொட்டியதால் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 17.03.2023 முதல் 20.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரியின் பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணை பகுதிகளில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
17.03.2023 முதல் 18.03.2023 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























