முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் தாயார் அண்மையில் காலமான நிலையில், ஓபிஎஸ்-ஐ முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம்விசாரித்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயதுமூப்பின் காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி இயற்கை எய்தினார். இபிஎஸ் தலைமையில் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வெளியாகி ஒபிஎஸ்-க்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அதற்கடுத்தநாள் அவரது தாயார் காலமானது மேலும் அவரை துக்கத்தில் ஆழ்த்தியது.
ஒபிஎஸ்-ன் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைமைகளும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அதற்குப்பிறகான சில நாட்களில் ஒபிஎஸ் மீண்டும் அரசியல் சார்ந்த பணிகளில் ஈடுபடத் துவங்கினார்.
இந்நிலையில், அவரை நலம் விசாரிக்கும் பொருட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் உதயநிதி உடனிருந்தனர். மேலும் ஒபிஎஸ் உடன் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.


























