தமிழ்நாடு அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரிக்காததன் எதிரொலியாக நாளை முதல் போராட்டம் நடத்தவுள்ளதாக பால் உற்பத்தியாளர் நலசங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆவினுக்காக கொள்முதல் செய்யப்படும் பசும்பாலின் விலை லிட்டருக்கு ரூ.35-ஆகவும், எருமைப்பாலின் விலை ரூ.44-ஆகவும் உள்ள நிலையில், இவற்றை தலா ரூ.7 உயர்த்தி ரூ42-க்கும், ரூ51-க்கும் கொள்முதல் செய்ய பால் உற்பத்தியாளர் சங்கம் பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் கோரிக்கை விடுத்ததில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இக்காரணத்தால் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கவிருப்பதாகவும், கொள்முதல் விலையை உயர்த்தும் கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் இச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், ”அரசு எங்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில், அதிக விலை கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எங்கள் பாலை விற்பனை செய்ய உள்ளோம். ஆவினுக்கு தினசரி 27 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் இதன் அளவு படிப்படியாகக் குறையும். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை குறைவாக உள்ளது. எனவே அதை உயர்த்தித் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


























