வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், படத்தொகுப்பு – வெங்கட் ராஜன்.
நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். ஆக்ஷன் – த்ரில்லர் ரக பாணியில் உருவாகியுள்ள இப்படம், வெங்கட் பிரபுவின் மாநாடு, மன்மத லீலை, விக்டிம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. வில்லத்தனத்துடன் புதிய தோற்றத்தில் அரவிந்த் சாமி இதில் காட்டப்பட்டுள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘கஸ்டடி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசரைத் தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























