தனது பகுதியில் குறைகள் உள்ளதாக முறையிட்ட மூதாட்டியிடம் ’நீ கொஞ்சம் வாய மூடு’ என்று ஒருமையில் அதட்டிப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி.
கட்சி சார்ந்த கூட்டங்களில் பொதுமக்களை தரக்குறைவாகப் பேசுவதும், மரியாதையின்றி அவர்களை ஒருமையில் அவமதிப்பதும் அமைச்சர் பொன்முடியின் வழக்கமாக உள்ளது. முன்னதாக பெண்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக இழிவாகப் பேசிய அவர், அதைத்தொடர்ந்து ஒரு கூட்டத்தில் குறைகள் குறித்து பேசிய பொதுமக்களிடம், ’ஆமா.. எனக்கா ஓட்டு போட்டு கிழிச்சீங்க’ என்று தரக்குறைவாகப் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், மீண்டும் மூதாட்டி ஒருவரை அவமதிக்கும் விதமாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில், ரூ.25.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பூங்கா ஒன்று அமைகப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி திறந்துவைத்தார். மேலும் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், சென்னையானாலும், விழுப்புரமானாலும், திருக்கோவிலூரானாலும் அப்பணிகள் எல்லோர் நலனையும் கருத்தில்கொண்டு செய்யப்படுவதாகவும் பேசினார். அப்போது குறுக்கிட்ட மூதாட்டி ஒருவர், ”எங்க இடத்துல குறையா இருக்கு” என்று பேசவே, ”குறையா இருக்கா… அய்ய… கொஞ்சம் வாய மூடிட்டு இரு… உங்க ஊட்டுக்காரர் வந்துருக்காரா? போயிட்டாரா? பாவம்… நல்லவேளையா போயிட்டாரு” என்று கிண்டலாக, அவரை அவமதிக்கும் தொனியில் பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அம்மூதாட்டியை சுற்றி அமர்ந்திருந்த சில பெண்கள், மூதாட்டியை அமைதியாக இருக்கச்சொல்லி சைகை செய்தனர்.
அமைச்சர் பொன்முடியின் இதுபோன்ற பேச்சுகள் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாவது தெரிந்தும் அவர் இதைத் தொடர்வது பொதுமக்கள் மீதான அவரது தாழ்வான பார்வையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. முன்னதாக திமுக அமைச்சர்களின் இதுபோன்ற சர்ச்சைப் பேச்சுக்களால் தனது தூக்கம் கெடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தும், இச்சம்பவங்கள் தொடர்வது அவர்களின் தலைமை மீதான கண்டுகொள்ளாமையைக் காட்டுவதாக உள்ளது.


























