நடந்த சம்பவங்கள் குறித்து பேச நிறைய உள்ளது என்றும், பேசமுடியாத அளவுக்கு தான் மனச்சோர்வில் உள்ளதாகவும் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருச்சியிலுள்ள எஸ்.பி.ஐ. காலனி பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதைத் திறந்துவைக்க வந்த அமைச்சர் கே.என்.நேருவின் காரை திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் வழிமறித்து கறுப்புக்கொடி காட்டினர்.
விளையாட்டு மைதான திறப்பு விழாவின் அழைப்பிதழிலும், அதன் பேனர்களிலும் திருச்சி சிவாவின் பெயர் இல்லாததால் அவரின் ஆதரவாளர்கள் இந்த முற்றுகையில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர் திருச்சியில் உள்ள சிவா எம்.பி.யின் வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வீட்டில் நின்றிருந்த கார், இருசக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடி, மின்விளக்கு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
இச்சம்பவம் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி சிவா எம்.பி. மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்மையில் இச்சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் சென்றிருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ள திருச்சி சிவா எம்.பி. இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு வேதனையுடன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”பஹ்ரைன் நாட்டிலிருந்து இப்போது தான் நான் தமிழ்நாடு திரும்பினேன். நடந்த சம்பவங்களை ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். இப்போது எதையும் பேசுகிற மனநிலையில் நான் இல்லை. கடந்த காலத்திலும் நான் நிறைய சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் நான் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னை விட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் தான் பலவற்றை நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதுமில்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவத்தில் வளர்ந்தவன், இருப்பவன் நான்.
தற்சமயம் நடந்துள்ள நிகழ்வு மிகுந்த மனவேதனை எனக்கு அளித்துள்ளது. வீட்டில் உள்ள என் உதவியாளரிடம் நான் பேசவேண்டும். நான் ஊரில் இல்லாத சமயம் அவர்களெல்லாம் மிகுந்த மனஉளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். என்னோடு இருந்த 65 நபர்களெல்லாம் காயப்பட்டிருக்கிறார்கள். நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், நான் எதையும் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த களைப்பிலும், மனச்சோர்விலும் இருக்கிறேன். மனச்சோர்வு என்ற வார்த்தையே எனக்குக் கிடையாது. வயதான மூதாட்டி என் வீட்டில் வேலை பார்க்கிறார். மேலும் வயதானவர்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள். வேறு எதுவும் பேசும் மனநிலை எனக்கு இப்போது இல்லை. என்னை மன்னிக்கவும். செய்தியாளர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் பேசப்போவதில்லை. எனவே இதுகுறித்து தெளிவாகவும், விரிவாகவும் பேசுகிறேன். தயவுசெய்து கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்று வேதனையுடன் பேசிமுடித்தார்.


























