இபிஎஸ் உருவப்படத்தை எரித்ததாகக்கூறி நேற்று நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி, இன்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பாஜகவில் அதிரடியான பல மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுக்களை வாரிக்குவித்தும், அதிலிருந்து விலகி கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் போய் இணைவதுமாக இச்சம்பவங்கள் தொடர்கின்றனர்.
மேலும் கூட்டணிக் கட்சிகளாக உள்ள பாஜக மற்றும் அதிமுக இடையேயும் சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அண்ணாமலை குறித்து அதிமுகவினர் விமர்சனம் வைப்பதும், அதிமுக உறுப்பினர்கள் குறித்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் விமர்சனம் வைப்பதுமாக இக்கட்சிகளிடையிலான மோதல் போக்கு தொடர்ந்துவருகின்றது.
இந்நிலையில், புதிய சர்ச்சையாக, கோவில்பட்டியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவம் பொறித்த புகைப்படம் பாஜக உறுப்பினர்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இச்செயலைக் கண்டிக்கும் விதமாக, தினேஷ் ரோடி பாஜகவின் கொள்கை குறிக்கோள்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் கூறி அவர் வகிக்கும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு விலக்கப்படுவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், நீக்கப்பட்ட தினேஷ் ரோடி மீண்டும் இன்று பாஜகவில் சேர்க்கப்படுவதாக கன்னியாகுமரி பெருங்கோட்ட மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், வெங்கடேசன் சென்னகேசவன் தினேஷ் ரோடியை 6 மாதகாலம் நீக்கி வெளியிட்ட அறிவிப்பு ரத்துசெய்யப்படுவதாகவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக உறுப்பினர்கள் கொத்துக்கொத்தாக அதிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்துவரும் நிலையில், பாஜக தங்கள் உறுப்பினர்களை ஒரே இரவில் நீக்குவதும், சேர்ப்பதுமாக குழப்ப மனநிலையில் செயல்படுவது தமிழக பாஜக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.




























