இ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக நின்ற இ.விகே.எஸ்.இளங்கோவன், தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இதைத்தொடர்ந்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திக்க அவர் சென்றிருந்த நிலையில், நேற்று தமிழகம் திரும்பிய அவருக்கு மூச்சுத்திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் லேசான தொற்று இருப்பதாகவும், அதனாலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் அவரது உடல் நிலை சீரானதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


























