‘சந்திரமுகி 2’ படத்தின் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை நடிகை கங்கணா ரணாவத் முடித்துவிட்டதாக ட்விட்டரில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்கு நர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சந்திரமுகி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து, ராம்குமாரின் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
திகில் – காமெடி – மனோதத்துவ மருத்துவம் கலந்த கதையாக உருவாகியிருந்த இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூலை அள்ளிக்குவித்தது. ஜோதிகா நடிப்பில் இதில் இடம்பெற்ற சந்திரமுகி கதாபாத்திரமும், வடிவேலுவின் நகைச்சுவையும் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டுசென்று இன்றும் பேசப்படும் படமாக வைத்துள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் சந்திரமுகியாக கங்கணா ரணாவத் நடிக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இவர் அண்மையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடலுக்காக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இதில் நடித்துவந்த கங்கணா ரணாவத், தனது கதாபாத்திரத்திற்கான பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரமுகி 2 படத்தின் தனது இறுதி நாள் படப்பிடிப்பை கேக் வெட்டி கொண்டாடி வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”ஒரு திரைப்படத்தின் படக்குழுவில் ஒரு நபராக இருப்பதால், நாம் பல அற்புதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை விட அதிகமான பரிச்சயமானவர்களாக நமக்கு ஆகிவிடுகிறார்கள்; ஏனென்றால் நீங்கள் ஒன்றாகச் சண்டையிடுகிறீர்கள், அவர்களை எதிர்கொள்கிறீர்கள், பல தீவிரமான உயர்வு, தாழ்வுகளில் ஒன்றாகப் பயணிக்கிறீர்கள். திடீரென்று அப்பயணம் முடியும்போது, அவ்வளவு சுலபமாக நம்மால் அதைக் கடக்கமுடிவதில்லை, அழுகையைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை. ’சந்திரமுகி2’ படப்பிடிப்பிலிருந்து பிரியாவிடை பெறுகிறேன்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வதால், இப்பபடம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























