தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொள்ள சாணி பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதைத் தடைசெய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் தற்கொலைகள் மற்றும் சாலைவிபத்துகள் குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை ஐஐடி நிர்வாக இயக்குநர் காமகோடியும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து ஆய்வறிக்கை குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”உலக அளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்ற செய்தி கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகம் ஏன் நிகழ்கின்றன என்று அறிந்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் காரணம் கேட்கப்பட்டபோது, எலி மருந்து, சாணி பவுடர் உள்ளிட்ட பொருட்களை தற்கொலை செய்துகொள்ள அவர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. தமிழக அரசின் சார்பில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாணி பவுடருக்கு தடை விதிக்கவேண்டும் என்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்துகளை தனியாக வரும் நபர்களுக்குத் தராமல் கூட்டமாக வருபவர்களுக்கு மட்டுமே தர அறிவித்துள்ளோம். தற்கொலைகளைத் தடுக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை உள்ள நிலையில், நிரந்தர தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” இவ்வாறு கூறினார்.


























