சிலம்பரசன் நடித்துள்ள ‘பத்துதல’ படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் நடித்து மார்ச் 30ல் வெளியாகும் திரைப்படம் ’பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்திலிருந்து ’நம்ம சத்தம்’, ’நினைவிருக்கா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இதன் இசைவெளியீடு இம்மாதம் 18ம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிலம்பரசன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. அதில் இடம்பெற்ற ’மல்லிப்பூ’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி பெரிதும் பேசப்பட்ட நிலையில், பத்து தல படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதன் டீசர் வெளியாகிவிட்ட நிலையில், டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























