சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை இயக்க ரூ.1620 கோடி செலவில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ இரயில்களின் பயன்பாடு பொதுமக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. போக்குவரத்து சேவை துவங்கிய நாட்களில் வரவேற்பில்லாமல் இருந்த மெட்ரோ இரயில் பயன்பாடு, கடந்த 1.5 வருடங்களில் அதிக வரவேற்பைப் பெற்று பொதுமக்கள் பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 5 நிமிடங்களுக்கு ஒரு இரயில், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணம் உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ இரயில் சென்னையில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பெற்றுவருகிறது.
இதைத்தொடர்ந்து தற்சமயம் நீலம் மற்றும் பச்சை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுவரும் மெட்ரோ சேவை மேலும் 3 வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. மேலும் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இரயிலை இயக்கும்படியான திட்டமும் அண்மையில் மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்ட்து.
இந்நிலையில், அதற்கடுத்தபடியான பாய்ச்சலாய், ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில்களை இயக்கவிருப்பதாகவும், அதற்காக ரூ.1620 கோடி செலவில் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்த தனது அறிவிப்பில், இதற்கான இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் அமையும் என்றும், இந்த அமைப்பு குறைந்தபட்சம் 90 வினாடி இடைவெளியில் இரயில்களை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், இப்பணிகள் அனைத்தும் 2027ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























