பிரசாந்த் கிஷோர் பீகாரிகளுக்கு விசுவாசமாக இருந்தால் தான் தமிழர்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பேன் என்று அவரது கருத்துக்கு நாதக சீமான் பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வடஇந்தியத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக, தமிழ்நாடு அரசு அவரைக் கைதுசெய்யவேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார். இதுபற்றி தனது பதிலில், ”பிரசாந்த் கிஷோருக்கு என் மாநிலத்தைப் பற்றித் தெரியவில்லை. நாங்கள் காவிரி நதிநீர் கேட்கும்போது எங்களை அடித்துவிரட்டி இந்திய நிலப்பரப்புக்குள்ளே நாங்கள் அகதியாக வரும்போது இவர் எங்கே இருந்தார். முல்லைப் பெரியாற்று நீருக்காக அடித்துவிரட்டப்படும்போது ஆந்திரக் காடுகளுக்குள் ஒரு மானையோ மயிலையோ சுட முடியாது; ஆனால் எங்கள் 20 பேரை சுட்டனர். அதையெல்லாம் கண்டிக்காமல் இவர் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை.
எங்கள் மீனவர்கள் 12 பேரை நேற்று கைதுசெய்துள்ளனர். அதற்கெல்லாம் ஒன்றுமே அவர் சொல்லவில்லையே. வடஇந்தியர்கள் தான் குறிப்பாக தமிழக இளைஞர்களை அடிக்கிறார்கள். சூலூரில், ஆர்.வி.எஸ். கல்லூரியில் அடித்தது யார்? கரூர் பேருந்து நிலையத்தில் அடித்தது யார்? திருப்பூர் தொழிற்சாலையில் ஒருவரை விரட்டி விரட்டி அடித்தது யார்? அவர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கி அரசியல் நடத்துவதற்காகவும், நிதிஷ்குமாரை எதிர்க்க சீமான் மீது வழக்குப் போட்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளவும் இவ்வாறு அவர் பெருமை பேசித் திரிகிறார். தம்பி பிரசாத் கிஷோர். நீ பீகாரிகளுக்கு விசுவாசமாக இருந்தால் நான் என் தமிழ் இனத்திற்கு உண்மையாக தான் இருப்பேன். என் மண், என் மக்களைப்பற்றி தான் நான் சிந்திக்கமுடியும். அதனால் அவர் கூறுவதைப் பற்றியெல்லாம் எண்ணி நான் கவலைப்படுவதாக இல்லை” இவ்வாறு கூறியுள்ளார்.


























