’The Elephant Whisperers’ சிறந்த ஆவணப்படமாக ஆஸ்கர் விருது வென்ற நிலையில், அதில் தோன்றிய முதுமலை தம்பதியை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் 95ம் ஆண்டு விழா கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து போட்டியிட்ட படங்களில் சிறந்த அசல் பாடல் பிரிவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தமிழ்நாட்டின் முதுமலையில் படமாக்கப்பட்ட ’The Elephant Whisperers’ படமும் வென்றன.
யானைகளை வளர்க்கும் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதியரின் யானையுடனான வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய விதத்தில் இதை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் இதை தயாரித்த குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றனர். ’The Elephant Whisperers’ ஆஸ்கர் வென்ற நிலையில், இதில் வரும் பொம்மன் – பெள்ளி தம்பதியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன் – பெள்ளி தம்பதியரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து கவுரவப்படுத்தினார். மேலும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
மேலும் ’The Elephant Whisperers’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்று தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகளை உலகறியச் செய்துள்ளதாகவும், முதுமலை தெப்பக்காடு முகாம் மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி யானை முகாம்களில் பணியாற்றிவரும் 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், அவர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


























