அண்ணாமலை எழுதிய புத்தகம் குறித்த மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜுவின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை சாடி கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப்பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜுவை கடந்த பிப்ரவரி 27ம் தேதி சந்தித்து அண்ணாமலை எழுதிய “Stepping beyond Khaki” புத்தகத்தை பரிசளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இப்புத்தகத்தை வாசித்த கிரன் ரிஜுஜு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த தனது பதிவில், ”இந்த புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அண்ணாமலை “Stepping beyond Khaki” புத்தகத்தை அழகாக எழுதியுள்ளார்; மேலும் பொருத்தமானதாகவும் & அதீத ஊக்கமளிப்பதாகவும் இப்புத்தகம் உள்ளது. இது அனைவருக்குமான ஒரு புத்தகம். தகவலின்படி, புத்தகம் கையிருப்பில் இல்லை, ஆனால் ’ப்ளூம்ஸ்பரிஇந்தியா’ வெளியீட்டாளர்கள் மூலம் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவரது பதிவை மேற்கோள்காட்டி அண்ணாமலை தேசபக்தியாளர் இல்லை என்றும், அவர் ஒரு சுயநலவாதி என்றும் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இதுபற்றிய தனது ட்விட்டர் பதிவில், ”போலியான புத்தகத்தை அமைச்சர் விளம்பரப்படுத்துவது அபத்தமானது. தேச பக்தி ஐபிஎஸ் வேலையை ஒருவர் எப்படி ராஜினாமா செய்யலாம்? இந்த சுயநல அண்ணாமலையால் ஒரு ஏழை மாணவனின் ஐபிஎஸ் ஆக வாய்ப்பு நழுவிவிட்டது. வெறும் 9 வருடங்கள் தேச பக்தி வேலையை மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்த அண்ணாமலை அரசு பணத்தை வீணடித்தது. ஐபிஎஸ் பயிற்சி பெறும் பலருக்கு இது எப்படி உத்வேகமாக இருக்கும்? அப்போது பலர் ராஜினாமா செய்யத் தொடங்குவார்கள் இல்லையா? ரஃபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது, அரசு வேலைகளில் தேச சேவையில் இருக்க வேண்டும். பாதி வழியில் ராஜினாமா செய்வது சுயநலத்தை காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.


























