இந்தியாவில் மாரடைப்பால் நிகழும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் இளவயது நபர்கள் மாரடைப்பால் மரணமடைவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளவயதினர் மாரடைப்பால் மரணமடையக்கூடிய செய்திகள் தற்சமயம் அதிகரித்துவருவது இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணினி முன்பாக நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவதால் போதிய உடலுழைப்பு இல்லாமல் போவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் ஆகியவை இளவயது மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% நபர்கள் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 2017-2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8% பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9% பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3% பேருக்கும், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4% பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு அறிக்கைகளில் 1990ல் 15.2% ஆக இருந்த மாரடைப்பால் மரணமடைவோர் விகிதம், 2023ல் 28.1%ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























