‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதன் முதல் பாடலின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தழுவி படமாக்கப்பட்ட இதை லைகா நிறுவனமும், மணிரத்னமும் சேர்ந்து தயாரித்தனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி’, ‘அலைகடல்’, ‘ராட்சச மாமனே’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிகம் வைப் செய்யப்பட்டு ஹிட் பாடல்களாகின.
பொன்னியின் செல்வன் படம் குறித்த அறிவிப்பின் போதே இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் 29ம் தேதி பிரம்மாண்டமாய் நடைபெறவிருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலாவருகின்றன. மேலும் இப்படத்தில் இடம்பெறும் ’அக நக’ பாடல் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலேயே ’அக நக’ எனத் தொடங்கும் சிறிய பின்னணிப் பாடல் இடம்பெற்று, இணையத்தில் வைரலான நிலையில், அதன் முழு பாடல் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























