தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாளை முதல் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட/ புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அதிமுக இத்தேர்தலை சந்திக்கிறது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 9 மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மனைவியின் இறப்பு காரணமாக எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதன்படி, நாளை செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், 2ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், மூன்றாம் தேதியன்று விழுப்புரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
























