ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இன்று போட்டி நடைபெறவிருக்கிறது.
இப்போட்டியைப் பொறுத்தவரை சென்னையைக் காட்டிலும் ஹைதராபாத்துக்குதான் வென்றாக வேண்டிய கட்டாயம் அதிக அளவில் இருக்கிறது. வெறும் நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. அதாவது இன்று நடக்கும் போட்டியோடு சேர்த்து நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களில் இருக்கு அணிகளைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தோற்கும் நிலையில் வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் நம்பிக்கைதானே பாஸ் எல்லாமே என்று கால்குலேட்டரோடு காத்திருக்கிறார்கள் ஹைதராபாத் ரசிகர்கள்.
சென்னையைப் பொறுத்தவரை செம்ம ஃபார்மில் இருக்கிறார்கள். சன்ரைசர்ஸைப் பொறுத்தவரை அது பவுலர்கள் நிறைந்த அணி என்றால் சென்னை பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணி. 9வது டவுனில் இறங்கிக்கூட வெளுக்குமளவு பேட்ஸ்மேன்களும் ஆல்ரவுண்டர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையை வெல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றாலும் கிரிகெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கும். திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வாழ்வு வந்த மாதிரி என்று சொல்வார்களே அது மாதிரி இந்த மேட்சோடு சேர்த்து நடக்கவிருக்கும் நான்கு மேட்சுகளிலும் ஹைதராபாத் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த த்ரில்தான் கிரிகெட்டின் மிக முக்கியமான அம்சம். சென்னையைப் பொறுத்தவரை இப்போட்டியில் வென்றாலும் தோற்றாலும் முதலிடத்தையே தக்க வைத்திருக்கும் என்பதால் கேப்டன் கூல் ஐ போலவே ரசிகர்களும் கூலாக இருக்கிறார்கள்.
























