காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.
தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாக பதவி விலகலுக்கு பின்னர் அமரீந்தர் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். இவ்வாறு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். டெல்லிக்கு சென்ற அமரீந்தர் சிங் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணைய உள்ளது உறுதி என்று ஊடகங்களில் செய்திகள் பரவிவருகிறது. இதையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுபற்றி கூறும் போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான நீண்டகாலமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் பற்றி அமித் ஷா- அமரீந்தர் சிங் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் நெருக்கடியை தீர்க்கவும் , குறைந்தபடச ஆதார விலைக்கு ( எம்எஸ்பிக்கு) உத்தரவாதம் அளிக்கவும், பயிர் பல்வகைப்படுத்தலில் பஞ்சாப்பை ஆதரிக்கவும் அமித்ஷாவை அமரீந்தர் சிங் வலியுறுத்தினார் என கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் தெரிவித்தார்.
ஆனால் இந்த விளக்கம் சம்பிரதாய கருத்தாகவே தெரிகிறது. தற்பொழுது பதவி ஏற்றிருக்கும் சரண்ஜித் சிங் சன்னி ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அமுல்படுத்தக்கூறியதாகவும் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் கூறியதாகவும் தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் பாஜக எடுக்கும் நடவடிக்கைகளைப்பொறுத்து அமித்ஷா அமரீந்தர் சிங் சந்திப்பில் என்ன நடந்தது என்று தெரியவரும்.
























