மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் கிழக்கு கல்வா பகுதியில் கோவிட்19 தடுப்பூசி போடச்சென்ற நபர், ராஜ்குமார் யாதவ், வயது 45, இவருக்கு சமீபத்தில் கீழ் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை ஆகியிருக்கிறதே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?’ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிட்டு, கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மருத்துவமனை சென்றிருக்கிறார்.
அங்கு அவரை ஒரு இடத்தில் வரிசையில் அமருமாறு கோரியுள்ளனர். பிறகு அவருக்கு இரண்டு கைகளிலும் செவிலியர் தடுப்பூசிப் போட்டுள்ளார்.
அவருக்கு கைகளில் கடும் வலி ஏற்பட்டுள்ளது, ”ஏன் இரண்டு கைகளிலும் குத்துகிறீர்கள்? இது என்ன?” எனக் கேட்டிருக்கிறார். “இது வெறிநாய்க்கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசி” எனச் செவிலியர் பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தானே நகராட்சி கூடுதல் ஆணையர், சந்தீப் மால்வி கூறும்போது, ”கொரானா தடுப்பூசிக்குப் பதிலாக ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் மற்றும் மருத்துவர் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம்” என்றார்.
அந்த செவிலியர் வந்து அமர்ந்தவரிடம் எதுவும் விசாரிக்காமல், அவரது மருத்துவ ஆவணங்களயும் பார்க்காமல் ஊசியைக் குத்தியிருக்கிறார். அதுவும் இரண்டு கைகளிலும், ஏன் ஊசி குத்துகிறார்’ எனச் சந்தேகப்பட்டு அவர் கேட்டதால்தான் உண்மை தெரியவந்தது.
இதே ரேபீஸ் தடுப்பூசி போட வந்தவருக்கு கொரோனா தடுப்பூசியைப் போட்டு அவர் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டவராக இருந்தால், அல்லது ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டு விட்டோம் என அவர் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் என்னவாகும்?!’ என்ற உணர்வே இல்லாமல் அந்த செவிலியர் செயல்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ராஜ்குமார் யாதவும், தான் போய் நின்ற வரிசை என்ன வரிசை என்பதை விசாரிக்காமலேயே போய் நின்று கடைசியில் ரேபீஸ் தடுப்பூசி குத்து வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
எப்படியோ கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபீஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ராஜ்குமார் யாதவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
























