இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள மாநாடு திரைப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 2ம் தேதி காலை 11.25க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்திய திரையுலகையே கவர் செய்யும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் நான்கு மொழிகளிலும் நான்கு பிரபலங்களால் வெளியிடப்படுகிறது. தமிழ் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் நானி, கன்னட ட்ரெய்லரை இயக்குநர்/நடிகர் ரக்ஷித் ஷெட்டி, மலையாள ட்ரெய்லரை நடிகர் நிவின் பாலி ஆகியோர் வெளியிடவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு வருவதில்லை என்பது போன்ற சர்ச்சைகளால் சிக்கி சில காலம் எந்தப் படமும் வெளியாகாத நிலையில் ஈஸ்வரன் படம் வெளியாகி படுதோல்வியடைந்தது. சிம்பு வெற்றிப்படம் கொடுத்தே நீண்ட காலமாகி விட்டதால் இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக இருக்கும் என சிம்பு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
























