2 1/2 வயது குழந்தை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி பாடகி சின்மயி ட்விட்டரில் கோபத்துடன் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
பின்னணிப் பாடகி சின்மயி பெண்கள் குறித்த சமூகப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். ‘Mee Too’ விவகாரத்தில், தான் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளிப்படையாக அவர்மீது குற்றச்சாட்டு வைத்ததிலிருந்து, சமூகத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவாக தனது குரலை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார்.
இந்த நிலையில், டெல்லியில், 2 ½ வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று, தான் வசித்துவந்த அபார்ட்மெண்டின் வளாகத்திலிருந்த ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள செய்தி ஒன்றைப் பதிவிட்டு கடுமையான பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ”இந்த நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தான் எவ்வளவு மரியாதை! கற்பழிப்பவரைத் பாலியல் ரீதியாக தூண்டுவதற்காக அந்தக் குழந்தை ஏதாவது ஆடை அணிந்திருக்கிறதா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்; இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன். இதுபோன்ற பெரும்பாலான CSA வழக்குகளைப் போல கற்பழிப்பவர் ‘ஆதாரம் இல்லை’ என்று விடுவிக்கப்படுவார்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய மற்றொரு பதிவில், பெங்களூருவின் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், மருத்துவ ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி விடுவிக்கப்பட்டதாக 2019ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, ”நீங்கள் இதை நம்பவில்லை என்றால், பெங்களூருவில் ஒரு குழந்தையை (குற்றம் சாட்டப்பட்ட) பாலியல் வல்லுறவு செய்த நபரை சுதந்திரமாக நடக்க வைக்க ஒரு பள்ளி ஒரு அருமையான வழக்கறிஞரை நியமித்தது” என்று பதிவிட்டுள்ளார்.


























