’நீட் தேர்வு ரகசியம் என்ன?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததாகக் கூறி அதுபற்றி விளக்கமளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தைத் திறந்துவைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றிருந்தார். அரங்கத்தைத் திறந்துவைத்து கூட்டத்தில் அவர் பேசுகையில், ”நான் அமைச்சராகப் பொறுப்பேற்றபின் சட்டமன்றத்தில் வைத்த முதல் கோரிக்கை, மாணவி அனிதா நினைவாக மருத்துவமனை அரங்கத்திற்கு ‘அனிதா அரங்கம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பது தான்.
நேற்று இரவு முதல்வர் எனக்கு போன் செய்து, நான் வைத்த முதல் கோரிக்கை இது எனக்கூறி, அரியலூரில் 22 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு மாணவி அனிதாவின் பெயரை வைக்கக்கூறி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு ரகசியம் பற்றி கேட்டுக்கொண்டேயிருக்கிறார். அது ஒன்றுமில்லை. எங்களது கல்வி உரிமை பறிக்கப்படும் போது தைரியமாக குரல் கொடுப்பது தான் அது. நீட் தேர்வு ரத்தாகும் வரை தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடரும். இது தான் அந்த ரகசியம்” என்று கூறினார்.


























