அதிமுகவினர் மீது பாஜகவினர் இனி எந்த விமர்சனமும் வைக்கக்கூடாது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.
சமீபமாக தமிழ்நாடு பாஜகவும் அதிமுகவும் வார்த்தைப்போர் மூலமாக எலியும் பூனையுமாக சண்டையிட்டுவருகின்றன. பாஜகவினர் அதிமுக குறித்து ஏதேனும் சர்ச்சையாகப் பேசுவதும், அதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றுவதுமாக இந்த சண்டை நீண்டுகொண்டேயிருக்கிறது.
அண்மையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியது எரியும் கொள்ளியில் மேலும் எண்ணெய் ஊற்றுவதாக மாறி இன்னும் இவர்களுக்கிடையிலான மோதலை அதிகப்படுத்தியது. இக்கருத்துக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனாலும், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று இருகட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதிமுகவினர் மீது இனி எந்தக் குறையும் கூறக்கூடாது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக பாஜகவினரை கண்டித்துள்ளார். பாஜக அலுவலகங்களைத் திறக்க கடந்த 10ம் தேதி ஜே.பி.நட்டா தமிழகம் வந்த நிலையில், அதிமுகவுடன் சுமுகமான உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றும், அதிமுகவின் தலைமை பற்றியோ, அக்கட்சியின் தொண்டர்களைப் பற்றியோ யாரும் குறை சொல்ல வேண்டாம் என்றும், தமிழக பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதை பின்பற்றி நடக்க வேண்டியும், இதை மீறி நடக்கக்கூடாது என்றும் அவர் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளாராம். இதற்குப்பின் பாஜக – அதிமுக இடையிலான வாய்க்கால் தகராறு சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.


























