சோழர் வரலாற்றின் ஒரு சம்பவத்தை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுவதாக ‘பகாசூரன்’ பட இயக்குநர் மோகன்.ஜி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. தொடர்ந்து ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அண்மையில் ‘பகாசூரன்’ படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் நடப்பு நிகழ்வுகளைக் கதைக்களமாகக் கொண்டு படம் இயக்கும் இயக்குநர்களில், மோகன்.ஜி என்றும் சர்ச்சைக்குறியவராகப் பார்க்கப்படுகிறார். இந்துத்துவக் கொள்கைகளை பேசி ஆளும் பாஜகவினரை ஆதரிப்பதாகவும், பிற்போக்குத்தனமான கருத்துகளைப் பேசுவதாகவும் கூறி இவர் இயக்கும் படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்துவருகின்றன.
அண்மையில் இவர் இயக்கத்தில் செல்வராகவ்ன், நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான ’பகாசூரன்’ படத்தில், பெண்கள் செல்போன் பயன்படுத்துவதாலேயே பிரச்சினைகளில் சிக்குவதாகவும், பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் இவர் பேசிய கருத்து சர்ச்சையாகி விமர்சனங்களைச் சந்தித்தது. ஆயினும் தனது படங்களில் தான் கூறும் கருத்துக்களில் மோகன்.ஜி திடமாக இருந்து அதற்கான எதிர்க்கருத்துகளுக்கு பதிலளித்துவருகிறார்.
இந்நிலையில், சோழர் வரலாற்றில் நடந்த சம்பவம் எதையேனும் படமாக இயக்க ஆசைப்படுவதாக மோகன்.ஜி வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ”சோழர் வரலாற்றில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தை, சிறிய பொருட்செலவில் இரண்டு மணி நேர திரைப்படமாக எடுக்க ஆசை.. வரலாற்று ஆவணங்களுடன் சேர்ந்த நிகழ்வோ அல்லது கற்பனை கதையாகவோ உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் அதற்கான அங்கிகாரம் தரப்படும்.. Gmfilmcorporation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவிற்கு பலரும் தங்களுக்குத் தெரிந்த சம்பவங்களைக் கருத்தாகப் பதிவிட்டுவருகின்றனர். அதே சமயம், இவரது முந்தைய படங்களின் கதைகளை கவனத்தில் கொண்டு சிலர், நையாண்டியாகவும் அவரை வம்புக்கிழுக்கும் வகையில் கருத்திட்டுவருகின்றனர். இதன் மூலம், ’பகாசூரனை’த் தொடர்ந்து ’ஆயிரத்தில் ஒருவன்’ போன்று சோழர்கள் குறித்த திரைப்படத்தை மோகன்.ஜி இயக்கத்தில் எதிர்பார்க்கலாம்.



























