அதானி குழுமம் சார்பாக தொழிலதிபர் கௌதம் அதானி வாங்கிய கடன் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அண்மையில் வெளியான ஹிட்டன்பெர்க் அறிக்கை குற்றம்சாட்டியது. இதன் விளைவாக அவரது பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த LIC மற்றும் SBI போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அதானி குழுமத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் தீபக் பாயிஜ் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் அவர் தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் அளித்துள்ள பதிலில், ”ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45Eன் படி கடன்கள் குறித்து வங்கிகள் சமர்ப்பித்துள்ள விவரங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 45E சட்டப்பிரிவுகளின்படி வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விவரங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தவோ, வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022 டிசம்பர் 31 நிலவரப்படி அதானி குழுமத்துக்கு LIC நிறுவனம் வழங்கியிருந்த கடன்கள் 6,347 கோடி ரூபாய். 2023 மார்ச் 5ஆம் தேதி நிலவரப்படி, அதானி குழுமத்துக்கு LIC நிறுவனம் வழங்கிய கடன்கள் 6,182.64 கோடி ரூபாய். இதில் அதானி APSEZ நிறுவனத்துக்கு மட்டும் 5,388.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


























