புதிய லுக்கில் ஸ்டைலாகக் காட்சியளிக்கும் லெஜண்ட் சரவணாவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ‘லெஜண்ட் சரவணா’ நடித்து சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ’தி லெஜண்ட்’. ஜே.டி.-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தனது சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடை விளம்பரங்களில் நடித்துவந்த அருள் சரவணன், இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 3ம் தேதி இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது.
அண்மையில், அருள் சரவணன் காஷ்மீர் சென்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அச்சமயம் லோகேஷ் கனகராஜின் ’லியோ’ படக்குழுவினர் காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்தனர். இதைத்தொடர்ந்து பல யூகங்கள் இணையத்தில் உலாவந்தன. அதன்படி, அருள் சரவணன், விஜய் நடிக்கும் ’லியோ’ படத்தில் நடிக்கிறார் என்றும், அதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவே காஷ்மீர் சென்றார் என்றும், இத்தகவல் ரகசியம் காக்கப்படுவதாகவும் செய்திகள் பரவிவந்தன.
இந்த நிலையில், தற்சமயம் அருள் சரவணன், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் புதிய தோற்றத்திலுள்ள தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது, ’ஒரு வேள இருக்குமோ?’ என்ற லெவலில் ஊகத்தை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. டிரிம் செய்த தாடியுடன், கறுப்பு கண்ணாடியில், கோட் சூட் போட்டுக்கொண்டு அவர் ஸ்டைலாக பல போஸ்களில் காட்சியளிக்கும் புகைப்படங்கள், அவர் ’லியோ’ படத்தில் நடிப்பதற்கான புதிய லுக் என்று இணையம் முழுக்க பேசப்பட்டுவருகிறது. இதுகுறித்த பதிவில், ’புதிய மாற்றம், தகவல்கள் விரைவில்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். எனினும், அவர் வேறுஏதேனும் புதிய படத்தில் நடிப்பதற்கான லுக்காக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது லெஜண்ட் சரவணாவின் ரசிகர்களை குஷியிலும், அதே சமயம் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.


























