ஆஸ்கர் விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘Everything Everywhere at all once’ திரைப்படம் 7 பிரிவுகள் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்றுவருகிறது. இதில் உலகளாவிய திரைப்படங்கள் பலவும் சிறந்த படம், சிறந்த பாடல், சிறந்த நடன அமைப்பு, சிறந்த நடிப்பு உள்ளிட்ட பிரிவுகள் போட்டியிட்டு விருதுகளை வென்றுவருகின்றன.
இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ’The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதையும், ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான ஆஸ்கர் விருதையும் வென்று கவனம் ஈர்த்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா சார்பில் இவ்விழாவில் போட்டியிட்ட ‘Everything Everywhere at all once’ திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசரவைத்துள்ளது. 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இத்திரைப்படத்தை டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். ஆஸ்கர் போட்டியில் 10 பிரிவுகளில் இப்படம் போட்டியிட்டது.
அதில் சிறந்த துணை நடிகருக்கான விருதை இதில் நடித்த கி ஹு ஹுவான், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை ஆகியவற்றிற்கான விருதை டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட், சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை இப்படத்தின் எடிட்டர் பால் ரோஜர்ஸ், சிறந்த நடிகைக்கான விருதை இதில் நடித்த மைக்கேல் யோ ஆகியோர் வென்றுள்ளனர்.
சலவைத் தொழில் செய்து வாழ்ந்துவரும் கதாநாயகி மற்றும் அவர் சார்ந்த விஷயங்களைப் பேசும் இப்படம் தனது எடிட்டிங்கால் பார்வையாளர்களை அசரவைக்கும்படியாக உள்ளதாக நெட்டிசன்கள் வலைதளங்களில் இப்படம் குறித்து சிலாகித்துவருகின்றனர். 7 ஆஸ்கர் விருதுகளை வென்று இப்படம் உலக அளவில் தற்சமயம் கவனம் ஈர்த்துள்ளது.


























