95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 95வது ஆஸ்கர் திரைப்பட விழுதுகள் வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இதில் உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல மொழிகளைச் சேர்ந்த படங்கள் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த நடன அமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிட்டன.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கு ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல்கள் பிரிவில் போட்டியிட்டது. எம்.எம்.கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவாகியிருந்த இப்பாடலில் இப்படத்தின் கதாநாயகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஆடிய நடனம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்.
இந்நிலையில், விழாவில் போட்டியிட்ட ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது. அண்மையில் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற இப்பாடல், தற்சமயம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது இந்தியத் திரையுலகினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
இவ்விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தமிழ்நாட்டிலுள்ள முதுமலையில் எடுக்கப்பட்ட ‘The Elephant Whispers’ படம் வென்றது குறிப்பிடத்தக்கது.


























