அரசியலில் படிப்படியாக உழைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
கடந்த மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 70வது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், ’எங்கள் முதல்வன் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி திமுகவினரால் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன் துவக்கிவைத்தார்.
இந்தக் கண்காட்சியில், முதல்வர் ஸ்டாலின் சிறுவயது முதல் சந்தித்த துன்பங்கள், நிகழ்வுகள் ஆகியவை குறித்த புகைப்படங்கள் மற்றும் மாதிரிகள் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பார்வையிட்டுவரும் நிலையில், இக்கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த், யோகிபாபு உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து கண்காட்சியைப் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மிகவும் அருமையான கண்காட்சி இது. என்னைப் பல நாட்களாக அழைத்துக்கொண்டே இருந்தனர். நான் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியவில்லை. இந்தக் கண்காட்சியைப் பார்க்கும்போது என்னுடைய இனிய நண்பர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கைப்பயணம், 54 ஆண்டுகால அரசியல் பயணம் என அனைத்தும் நினைவுக்கு வருகிறது. அவரது அரசியலும், வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான்.மு.க.ஸ்டாலின் படிப்படியாக உழைத்து வெவ்வேறு பதவிகளை வகித்து தற்போது முதல்வராகியிருக்கிறார் என்றால் அது மக்கள் அவரின் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம்” என்று முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார்.
மேலும் உடனிருந்த அமைச்சர் சேகர்பாபு குறித்து பேசிய ரஜினிகாந்த், ”அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர்; அன்பானவர். அவருக்கு இன்னொரு முகம் இருக்கு… பாட்சா மாதிரி” என்று பேசினார்.


























