அண்மையில் திருமணம் முடித்த OYO நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இளம் தொழிலதிபர்களில் ஒருவர் OYO நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரித்தேஷ் அகர்வால். 29 வயதாகும் இவர் தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடும் OYO நிறுவனத்தை கடந்த 2013ல் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்தவர்.
கடந்த 7ம் தேதி கீதன்ஷா ஷூட் என்பவருடன் டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் இவரது திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட இத்திருமணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தது பெரிதும் பேசப்பட்ட்து.
இந்நிலையில், ரித்தேஷ் அகர்வாலின் தந்தை, தான் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் பகுதியிலுள்ள DLF’s The Crest society என்ற குடியிருப்பில் வசித்துவரும் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், அக்கட்டிடத்தின் 20வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ரித்தேஷின் திருமணம் முடிந்து 3 நாட்களே ஆன நிலையில் நடந்துள்ள இச்சோக நிகழ்வு அனைவரையும் கலக்கமடையச் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து ரமேஷ் அகர்வாலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ள காவல்துறையினர், இது தற்கொலையாக இருக்கக்கூடுமோ என்ற விதத்தில் இதனை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


























