நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் நரேந்திரமோடி பாரதப் பிரதமராக வரவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளும், இந்த முறையும் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்று பாஜகவும் வியூகங்களை அமைத்துவருகின்றன.
யார் வெற்றி பெற்றாலும் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசிவரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மீண்டும் பாஜகவைச் சேர்ந்த நரேந்திரமோடியே பிரதமராக வரவேண்டும் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்திய நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி, இந்திய நாட்டின் புகழை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கிறார். பல்வேறு நிலைகளில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்வதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்பொழுது அவர்கள் தனியாக நிற்பார்களா? நாங்கள் தனியாக நிற்போமா என்று எங்களுக்குள் இடைவெளியை நீங்கள் ஏற்படுத்தாதீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் தேசிய நலன் எங்களுக்கு முக்கியம். அந்த தேசிய நலனில் யார் நாட்டுக்கு பிரதமராக வரவேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். அதனடிப்படையில் நரேந்திரமோடி தான் மீண்டும் இந்நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பல்வேறு சிந்தனையுடையவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும்பொழுது ஏற்கமுடியாத சில கருத்துகளைச் சொல்லிவிடுவார்கள். அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு அதுகுறித்து அறிவுரை சொல்லிவிட்டு ஒதுங்கிச் சென்றால் தான் நாம் நினைத்த இடத்தை அடைய முடியும். அதைவிடுத்து அதற்கு பதில்சொல்லிக்கொண்டிருந்தால் நாம் இருக்கிற இடத்திலேயே தான் இருக்கவேண்டி இருக்கும். எங்களை இருக்கிற இடத்திலேயே இருக்கவைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே அதை நாங்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டு எங்களுடைய இலக்கை அடைவதற்காக எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோம்” இவ்வாறு பேசியுள்ளார்.


























