ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி தான் இந்தியாவை அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நாடாளுமன்றம், பத்திரிக்கை சுதந்திரம், நீதித்துறை போன்ற ஜனநாயக கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு ஆளும் பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டத்தில், ராகுல் காந்தி லண்டனில் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இரு அவைகளின் பாஜக உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியாவை உண்மையில் அவமதித்தது பிரதமர் மோடி தான் என்று இரண்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், ”நரேந்திர மோடி ஜி! சீனாவில் நீங்கள் பேசியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால், ‘முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமைப்படுகிறீர்கள்’. இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்துவது போல் இல்லையா? உங்கள் அமைச்சர்களிடம் அவர்களின் நினைவுகளை கொஞ்சம் திருப்பி பார்க்கச் சொல்லுங்கள்.
தென் கொரியாவில் நீங்கள் சொன்னது, ’கடந்த காலத்தில் என்ன பாவம் செய்தோமோ, இப்போது நாம் இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம் என மக்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. இதைத்தான் நாடு என்கிறார்கள்’ என்று சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு பாடம் எடுப்பதற்கு முன்பாக உண்மையின் கண்ணாடியை முதலில் நீங்கள் பாருங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


























