இசைக்கலைஞர் சந்திரசேகர் மறைவையொட்டி இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்துப் பல படங்களில் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ள கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானது இசைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 79.
இசைஞானி இளையராஜா இசைத்துறைக்குள் நுழைந்த காலம் தொட்டே அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ள சந்திரசேகர், இளையராஜா மட்டுமல்லாது, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், திவாகர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழில், ’இளைய நிலா பொழிகிறதே’ பாடலுக்கு கிட்டார் வாசித்து பிரபலமான இவர், பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். மேலும் பிரபல பாடலான ’வசந்த கால நதிகளிலே’ பாடலுக்கு மவுத் ஆர்கன் வாசித்தவரும் இவரே. இந்த நிலையில் அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட இசைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கு வீடியோ வெளியிட்டு இசைஞானி இளையராஜா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞர் சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அவர் என்னுடன் இருந்த புருஷோத்தமனின் சகோதரர். நாங்களெல்லாம் ஒரே நேரத்தில் மேடையிலிருந்து திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள். நிறைய பாடல்களில் அவர் கிட்டார் வாசித்திருக்கிறார். அவரின் இசை இன்னும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு உருக்கமாகப் பேசியுள்ளார்.

























