முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து அதன் உறுப்பினர்கள் விலகுவது குறித்து சில நாட்களுக்கு முன்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சியின் முன்னேற்றம் குறித்து சில முடிவுகளை எடுக்கும்போது உறுப்பினர்கள் விலகுவது சகஜம் என்றும், தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோரது கட்சியிலிருந்தும் இவ்வாறு உறுப்பினர்கள் விலகியுள்ளதாகவும், தானும் அவர்களைப்போல் ஒரு தலைவன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மனில்லை என்பது போல் இந்தியாவில் ஜெயலலிதா போன்று யாரும் பிறக்கப்போவதில்லை என்றும், அவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுப் பேசியது தவறு என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். மேலும் அண்ணாமலை பேசியதைக் கண்டித்து அவரது உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனது கருத்தை பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக எப்பொழுது ஆட்சிக்கு வரும் என்று தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்காக நான் தொடர்ந்து உழைத்துவருகிறேன். அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியானதல்ல. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. எல்லா கட்சியும் வளர்ந்த விதம் வேறு. பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் விதம் வேறு. நான் என்னுடைய கருத்திலிருந்து முன்செல்லப்போவதும் கிடையாது, பின்வாங்கப்போவதும் கிடையாது.
எல்லோரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான். தமிழ்நாட்டில் 10 தலைவர்கள் மட்டுமல்ல; எட்டரை கோடி பேரும் தலைவர்கள் தான். ஒவ்வொரு தாயும் ஒரு தலைவி தான். ஜெயலலிதா அம்மையாருக்கு தேர்தலில் டெபாசிட் போனது. ஆனாலும் அடுத்த தேர்தலில் நின்று அவர் வெற்றிபெற்றார். என்னுடைய உவமையும் அப்படிப்பட்டது தான். நானும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன். நான் யாரையும் என்னுடன் ஒப்பிட்டுப் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை என்னுடைய தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு பவர்ஃபுல். என்னுடைய மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்ஃபுல்” இவ்வாறு பேசினார்.


























