தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுகிசிவம் பேசியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் திருநெல்வேலியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேச்சாளர் சுகிசிவம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் மருதாச்சல அடிகளார் உள்ளிட்ட ஆன்மிக முக்கியஸ்தர்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும், பாஜக, நாம் தமிழர், இந்து அமைப்பினர் உள்ளிட்ட கட்சிகளும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கூட்டம் தொடங்கியதிலிருந்தே, இந்து அமைப்பினர் சிலர் வாக்குவாதங்களில் ஈடுபட்டுவந்தனர். கூட்டத்திற்கு, ’தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா?’ என்பதற்கு பதிலாக ’தமிழில் குடமுழுக்கு நடத்துதல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூச்சலிடத் துவங்கினர்.
தொடர்ந்து பேச்சாளர் சுகிசிவம் பேசத் துவங்கிய நிலையில், அவர் பிற மதத்தினருக்கு ஆதரவாகப் பேசுபவர் எனக்கூறி அவரை வெளியேறச்சொல்லி இந்து அமைப்பினர் கோஷம் எழுப்பினர். இந்நிகழ்வு கூடட்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கருத்துக்கேட்புக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
தமிழில் சைவ ஆகம விதிப்படி கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதை தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் நடத்தக்கோரி குழு அமைக்கவும், தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ குடமுழுக்கு நடத்த மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


























